ஈரோடு மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பவானி, ஜமுக்காளம் ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இன்றி தேக்கமடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, பருவாச்சி, ஜம்பை, அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஜமுக்காளத்தை நெய்து வருகின்றனர். இங்கு நெய்யப்பட்ட ஜமுக்காளம் பவானியில் அரசு மற்றும் தனியார் என 26 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்யப்படும் ஜமுக்காளத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா உட்பட பல மாநிலங்களும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ளதால் ஜமுக்காளம் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன. மேலும் புதிய ஆர்டர்கள் பெறுவதிலும் சிக்கல் உள்ளதாக ஜமுக்காளம் தயாரிப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.