ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செண்பகாம்பாள்புரம் ஊராட்சி கீழத்தெருவில் குமார் மகள் ரூபிதா வசித்து வந்தார். அதே பகுதியில் நீலமேகம் மகள் கவுசிகா வசித்து வந்தார். இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் ரூபிதா மற்றும் கவுசிகா இருவரும் செண்பகாம்பாள்புரத்தில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு ரூபிதா ஏரியில் கால் கழுவிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தண்ணீருக்குள் மூழ்கி விட்டார்.
இதனால் கவுசிகா ரூபிதாவை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய 2 சிறுமிகளையும் தீவிரமாக தேடினர். இதனையடுத்து பொதுமக்கள் ஏரியில் மூழ்கிய 2 சிறுமிகளையும் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமிகளின் உறவினர்கள் சடலத்தை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் தாசில்தார் மதுசூதனன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில் உறவினர்கள் கூறியதாவது “செண்பகாம்பாள்புரம் ஏரிக்கரை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் கால்நடைகள், மனிதர்கள் ஏரிக்குள் விழுந்து உயிரை இழக்கும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
ஆகவே ஏரிக்கரையை பாதுகாப்பாக அமைக்க நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கவும் உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பின் அவர்கள் சமாதானத்திற்கு வந்தனர். அதன்பின் காவல்துறையினர் இறந்த சிறுமிகளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.