ஏப்ரல் 15ம் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் திட்டமில்லை என்று இந்திய ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் அடிப்படையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 14ம் தேதி ஊரடங்கு முடிவுறும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையே வரக்கூடிய 15ம் தேதி முதல் இரயில்வே போக்குவரத்து இயக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின.
இதுமட்டுமின்றி “நான்கு மணி நேரத்திற்கு முன்னரே பயணிகள் அனைவரும் ரெயில் நிலையம் வந்துவிட வேண்டும் என்றும், அவர்களுக்கு வெப்ப சோதனை நடத்தப்படும் என்றும் பலவிதமான யூகங்கள் இடம் பிடித்திருந்தது. இதற்கு இந்தியன் ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதைப்பற்றி இரயில்வே நிர்வாகம் கூறுகையில்; வருகிற ஏப்ரல் 15ம் தேதிக்கு பின் ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து இதுவரை எந்தவிதமான திட்டமும், முடிவும் எடுக்கவில்லை. பொது மக்களின் நலனிற்காக சாத்தியமான முடிவுகளை இரயில்வே நிர்வாகம் எடுக்கக்கூடும். அதனால் பயணிகள் அனைவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம்.
இதுபோல தவறான வதந்திகளை பரப்புவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தியன் ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கக்கூடும் என்பது குறிப்பிடதக்கது.