இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கு,பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .
வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. எனவே இந்த போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .அதில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் போது, வீரர்கள் யாராவது தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்,அந்த வீரர்கள் இந்திய அணியுடன் சேர்ந்து விளையாட முடியாது என்றும், அதோடு அவர்கள் டெஸ்ட் தொடரில் முற்றிலும் விளையாடுவதற்கான வாய்ப்பை இழப்பார்கள், என்று உறுதியாக தெரிவித்துள்ளது.
அத்துடன் பயோ பபுள் கட்டுப்பாடு விதிமுறைகளை வீரர்கள், இங்கிலாந்து தொடர் முடியும் வரை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.வரும் ஜூன் 2ம் தேதி இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்பாக, இந்தியாவில் 8 நாட்கள் பயோ பபுள் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 8 நாட்களில் வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்போது , வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அந்த வீரரை இங்கிலாந்திற்கு அழைத்து செல்ல மாட்டோம் , என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே இங்கிலாந்தில் விளையாட உள்ள தொடர் ,நீண்ட கால தொடராக இருப்பதால் வீரர்கள் தங்களுடைய குடும்பத்தினரையும் அழைத்து செல்லலாம் என்றும், ஆனால் அவர்களும் பயோ பபுள் வளையத்திற்குள் இருக்க வேண்டும் என்று, பிசிசிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது.