19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தபோது, அவருக்கு மிகவும் பயப்படுவேன், என்று இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், தற்போது இந்திய அணியில் தலை சிறந்த வீரர்களாக உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் ரிஷப் பண்ட் ,இஷான் கிஷன், ப்ரித்வி ஷா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ,இவரது பயிற்சியில் உருவாகிய வீரர்கள் ஆவர். இதுகுறித்து பிரித்வி ஷா கூறும்போது, ” நான் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை கண்டு மிகவும் பயப்படுவேன். அவர் பயிற்சியாளராக இருந்தபோது, அனைத்து வீரர்களிடமும் ஒழுக்கத்தை மிகவும் எதிர்பார்ப்பார். இதனால் அவரை கண்டாலே பயமாக இருக்கும்.
பயிற்சி மற்றும் போட்டி நேரங்களை தவிர்த்து மற்ற நேரத்தில் நட்புணர்வுடன் எங்களிடம் பழகுவார். இரவு நேர உணவு சாப்பிடும்போது, அவர் எங்களுடன் அமர்ந்து சாப்பிடுவார்.அப்போது மிகப்பெரிய ஜாம்பவான் அருகில் இருப்பதை எண்ணி பெருமையாக இருக்கும் ” என்று கூறினார். “ஒவ்வொரு வீரருக்கும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுடன் இருப்பது, ஒரு கனவாக இருக்கும். இதனால் அவருடன் இருந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பயிற்சியாளராக இருந்தபோது, வீரரின் பேட்டிங் ஸ்டைலை மாற்றாமல் ,வீரருக்கு இயல்பான அணுகு முறையை பின்பற்றி சொல்வார். அத்துடன் நாங்கள் பேட்டிங்கில் ஏதேனும் தவறு செய்திருந்தால், எங்களிடம் திருத்தங்களை சரியாக சொல்வார். அதோடு போட்டியில் விளையாடும்போது ஒரு வீரரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் ,என்பதை குறித்தே அதிகமாக பேசுவார் “, என்று கூறினார் .