வேலூரில் தீவிரபடுத்தப்பட்ட கட்டுப்பாடு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் மாவட்டத்தில் தினசரி 700-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதன்பின் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அபராதம் விதித்தல் மற்றும் ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பாதிப்பு சதவீதம் வெகுவாக குறையத் தொடங்கியது.
எனவே தற்போது மாவட்டத்தில் 100-க்கும் கீழ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது . 4 மண்டலங்கள் கொண்ட மாநகராட்சியில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதுதவிர வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் சேர்ந்தவர்களும் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 1,2 ஆகிய மண்டலத்தில் தலா ஒருவரும், 3-வது மண்டலத்தில் 4 பேரும், 4- வது மண்டலத்தில் 3 பேரும் என 8 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.