விசாரணை கைதிகளை இனி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்க கூடாது என தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கடை திறந்து வைத்து இருந்ததன் காரணமாக தந்தை மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில், சாத்தான்குளத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின் கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர்கள் உடல்நல பாதிப்பால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களது மரணத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று குற்றம் சாட்டிய உறவினர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வாறு இருக்கையில், வியாபாரிகள் சங்க தலைவர்கள் வெளியிட்ட அறைகூவலின் படி தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் அதிரடி உத்தரவு ஒன்றை தற்போது தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் பிறப்பித்துள்ளார். அதில், விசாரணை கைதிகளை இனி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க கூடாது. தடுப்புக்காவல் மையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் ஜாமினில் கைது செய்யப்படுபவர்களுக்கு உடனடியாக காவல்துறை ஜாமின் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.