கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறையின் இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கை நாட்டை சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே ஆவார். இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அதன் அடிப்படையில் “ரெஸ்ஆப்” என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் அலர்ஜி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடித்துவிடும் என்று கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், காய்ச்சல் போன்ற எளிய அறிகுறிகளைக்கொண்டே ஒருவருக்கு கொரோனா மாதிரியான வியாதி ஏற்பட்டிருக்கிறதா? அது எந்த அளவு தீவிரமாக செயல்பட்டுள்ளது என்றும் இந்த செயலி தெரிவித்துவிடும் என்று கூறப்படுகின்றது. இந்த செயலி 92 % துல்லியமாக முடிவுகளை வெளியிடுவதாகவும் இதை உருவாக்கியுள்ள நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய உயிர் மருத்துவ தொழில் நிறுவனமான பைசர், இந்த செயலியை ரூ.1,474 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு கட்ட பரிசோதனைகள், மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலுக்கு பிறகே இந்த செல்போன் செயலி வெளிப்பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.