இந்தியாவில் பாலியல் சர்ச்சைகள் மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவான சாமியார் தான் நித்தியானந்தா. அதன் பிறகு இவர் திடீரென இந்துக்களுக்கு என்று கைலாசம் என்னும் இந்து நாடு அமைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கைலாசம் எங்கே இருக்கின்றது என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாத நிலையில் கைலாசவிலிருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக பிரசங்கங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கைலாசவில் வேலை வாய்ப்பு என்று சமூக முகநூல் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கைலாய தேசம், கிறிஸ்தவர்களுக்கு எப்படி வாடிகானோ அதனைப் போல இந்துக்களுக்கு என்று இருக்கின்ற ஒரே இந்து தேசம். கைலாய தேசமானது 140 நாடுகளில் நடைமுறை அதிகாரம் பெற்ற தூதரகங்கள், 32 வங்கிகள், 1400 செயலாண்மை குழுக்கள், பல்கலைக்கழகங்கள், குருகுலங்கள், ஆலயங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் தனக்குரிய இறையாமைனுடன் கூடிய நிலத்தை கொண்டு இருக்கிறது.
இங்கு கல்வி அமைச்சகம், மனித சேவைகள் அமைச்சகம், சுகாதார அமைச்சகம், மத வழிபாடு தளங்கள் அமைச்சகம், வேளாண்மை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்கான தகுதி கல்வி திட்டச் சான்றிதழ் தேவை இல்லை. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதவோ படிக்கவோ தெரிந்தால் மட்டுமே போதும். ஓராண்டு கால பயிற்சி காலத்தில் மாதம் 10,000 வழங்கப்படும். ஓராண்டு காலம் பயிற்சி முடிந்ததும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவர்களின் தகுதிக்கேற்ப உலக அளவில் இருக்கும் கைலாசங்களில் பணியமர்த்தப்படுவர். அதுமட்டுமில்லாமல் இலவச உணவு, இலவச மருத்துவ பாதுகாப்பு, உங்கள் குழந்தைகளுக்கு இலவச குருகுலம் இந்து கல்வி என அனைத்து வசதிகளும் உள்ளது. 25 ஆயிரம் பணி வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்து மதத்திற்கு எதிரானவர்களோ, இந்துவிற்கு எதிரானவர்களோ தயவு செய்து விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.