மாணவரின் விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் காமராஜர் நகரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்தார். இவர் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் மாணவர் விஷால் திடீரென்று விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவரின் இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது செய்ய வேண்டும் என கடந்த 5-ம் தேதியன்று திருநாகேஸ்வரம் கடைவீதியில் விஷால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாணவர் தற்கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல்துறையினரை கண்டித்து மீண்டும் 100-க்கும் மேற்பட்டோர் திருநாகேஸ்வரம் கடைவீதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை மேற்கொண்டும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து வஜ்ரா வேன் வந்த நிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதன்பின் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு 4 மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடைபெற்றதால் கும்பகோணம்-காரைக்கால் சாலையில் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.