Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#EngvsPak : 100% மழை வரும்…. இறுதிப்போட்டி நிறுத்தப்படுமா?…. அப்படி நடந்தால் என்ன நடக்கும்..!!

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் மழை வந்து ஆட்டம் நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல 2ஆவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இப்போோட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வசதியுள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்ன் மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

இன்றைய போட்டியில் கோப்பைக்காக இரு அணிகளும் முட்டிமோதிக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. ஆனால் அதே ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2010 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையில் 2 அணிகளும் சூப்பர் 8 சுற்றில் மோதியது. அப்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டு இங்கிலாந்து உலகக்கோப்பையும் வென்று அசத்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் மல்லுகட்டப்போகிறது.

இந்நிலையில் இறுதிப் போட்டியின் போது மழை குறுக்கிட்டு போட்டி தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் மெர்ல்போனில் இன்று 15 முதல் 20 மி.மீட்டர் வரை மழை பெய்ய 100 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், நாளை 95% வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களும் மழை வந்து போட்டி நிறுத்தப்பட்டால் இரண்டு அணிகளுமே சாம்பியன் என்று அறிவிக்கப்படும். இன்றைய நாளில் மழை வந்தால் ரிசர்வ் நாளாக நாளை போட்டி நடக்கும்.

லீக் சுற்றின் முடிவில் 2 அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வரை ஆடி முடிந்திருந்தால் டக் வொர்த் லூயிஸ்  முறைப்படி வெற்றியாளரை  முடிவு செய்வது வழக்கம். ஆனால் நாக்கவுட் சுற்றுப்போட்டியின் போது முடிவு தெரிய இரு அணிகளும் குறைந்த பட்சம் 10 ஓவராவது ஆடி முடித்து இருக்க வேண்டியது கட்டாயம். இன்றைய போட்டியில் ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஓவர்களை குறைத்து போட்டியை நடத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆனால் இன்று மழையால் ஓவரை குறைத்து ஆட்டம் தொடங்குவதாக அறிவித்த பின் இன்றைய நாளில் ஆட்டம் நடக்கவில்லை என்றால் மாற்று நாளான நாளை முழுமையாக 20 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படும். அதே சமயம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் தொடங்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்த முடியாமல் போகும் பட்சத்தில் மறுநாளான நாளை அந்தப் போட்டி முந்தைய நாள் நிறுத்தப்பட்ட நிலையிலிருந்து தொடங்கி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கணிக்கப்பட்ட பிளேயிங் XI : 

இங்கிலாந்து : 

ஜோஸ் பட்லர் (c & wk), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட்/டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான்/மார்க் வூட், அடில் ரஷித்.

பாகிஸ்தான் : 

முகமது ரிஸ்வான் (wk), பாபர் அசாம் (c), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அப்ரிடி.

Categories

Tech |