Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என் கூட சேர்த்து வைங்க” பதற வைத்த வாலிபர்… தீயணைப்பு துறையினரின் சிறப்பான செயல்…!!

காதல் தோல்வியால் வாலிபர் நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு  முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் அறிவழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரமணிகண்டன் காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் அவரின் பெற்றோர்கள் செய்து வந்துள்ளனர். இதனையறிந்த வீரமணிகண்டன் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் விரக்தியினால் வீரமணிகண்டன் அப்பகுதியில் அமைந்துள்ள 150 அடி உயரம் உள்ள மேல்நிலை தண்ணீர் தேக்கத் தொட்டியின் மீது ஏறி சென்று தனது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி தனது கையை கத்தியால் கிழித்து கொண்டும், மேலே இருந்து கீழே குதித்து விடுவேன் என்றும்  சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் வீரமணி கண்டனை கீழே இறங்கி வரும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர் நீங்கள் யாராவது தன்னை காப்பாற்ற வேண்டும் என்று மேலே வந்தால் நான் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து வீரமணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கூறியுள்ளனர். ஆனாலும் அதற்கும் வீரமணிகண்டன் கீழே இறங்கி வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்களிடம் நான் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது தொட்டியின் மற்றொரு வழியாக ஏறி சென்று அந்த வாலிபர் கீழே விழாமல் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தபடி செய்து அந்த வாலிபரை பிடித்து விட்டனர்.

அதன் பிறகு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து அந்த வாலிபருக்கு நீர்த்தேக்கத் தொட்டியின் மேலே  அமர வைத்து தண்ணீர் மற்றும் உணவை கொடுத்து சமாதானம் செய்து அவரை கீழே அழைத்து வந்தனர். இதனையடுத்து வீரமணிகண்டன் கைகளில் கத்தியால் கிழித்து கொண்டதனால் ரத்தம் வடிந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வீரமணிகண்டனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |