பாண்ட் படங்களுக்கு பிரியா விடை கொடுத்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது என்று ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சலிஸ்: ‘நோ டை டூ டை’ படத்தின் கடைசி காட்சி படமாக்கப்பட்ட பிறகு எமோஷனலாக விடைபெற்றார் தற்போதைய பாண்ட் நடிகர் டேனியல் கிரேக். உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25ஆவது படமாக ‘நோ டைம் டூ டை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போதைய பாண்டாக வலம் வரும் டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவரது ஐந்தாவது பாண்ட் படமாகும்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘நோ டைம் டூ டை’ படத்துக்காக டேனியல் கிரேக் நடிக்கும் கடைசி காட்சி கடந்த இரு நாட்களுக்கு முன் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினர்களிடமிருந்தும், ஜேம்ஸ் பாண்ட் வரிசையிலிருந்தும் பிரியா விடை பெற்றார் கிரேக்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘நோ டை டூ டை’ படக்குழுவினரிடமிருந்து அவ்வளவு எளிதாக விடைபெற முடியவில்லை. மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்தவுடன் மொத்தக் குழுவினரும் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியே வந்து ஒருவரையொருவர் கட்டித்தளுவி நன்றி, வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அந்த நேரத்தில் நான் பேச நினைத்தேன். ஆனால் முடியவில்லை என்றார்.