இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. அங்கு ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல அதிகாரிகள் காமராஜபுரம், வேலாயுதம் நகர், பகுத்தறிவு நகர், செங்குந்தபுரம், கரடிகுளம், அண்ணா நகர், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் 20 க்கும் மேற்பட்டோர்க்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் திடீரென அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐந்து கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. அதன்பிறகு முகக் கவசம் அணியாமல் இருந்த 20 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்து வசூலித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் மறுபடியும் இது போன்று செய்பவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுபாஷினி எச்சரித்துள்ளார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துயுள்ளார். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சுபாஷினி கேட்டுக் கொண்டார். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளிய வர வேண்டும் என்றும் அவ்வாறு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.