ஸ்ரீயோக ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்குரிய லக்ஷ்மி யானை இன்று காலை லாரி மூலம் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக தேக்கம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் இருக்கும் ரேணுகாம்பாள் கோவில் உடன் இணைந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்கு சொந்தமான யானை ஒன்று உள்ளது. இந்த யானையின் பெயர் லட்சுமி ஆகும். இந்த லக்ஷ்மி யானை இன்று காலை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக லாரி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புத்துணர்வு முகாம் நாளை தொடங்கி வருகிற மார்ச் 27ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற இருக்கிறது.
முன்னதாக லட்சுமி யானை மற்றும் யானையுடன் வரும் பாகன்கள், கால்நடை மருத்துவர், லாரியை ஓட்டி வரும் டிரைவர் ஆகிய அனைவருக்கும் முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா இல்லை என்று முடிவு செய்த பின்னரே அவர்கள் முகாமிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த யானைக்கு ரேணுகாம்பாள் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்று பின்னர் அங்கிருந்து வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கு லட்சுமி யானை மற்றும் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், பாகன்கள் ரங்கன், சரவணன் மற்றும் கால்நடை மருத்துவர் பெரியசாமி ஆகியோர் வந்துள்ளனர்.