கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சானமாவு வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் கூட்டமாக வருவது வழக்கம். மேலும் தேன்கனிக்கோட்டை பகுதியில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனையடுத்து அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்து விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையை கடக்க முயற்சி செய்த போது, அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி திடீரென யானை மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் யானையின் வயிற்றுப் பகுதி மற்றும் பின்னங்கால் பகுதியில் பலமாக அடிபட்டு சாலையில் விழுந்து விட்டது.
இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அடிபட்டு கிடந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் குழுவினர் கடுமையாக முயற்சி செய்தும், சுருண்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டது. இதனையடுத்து யானையின் இறப்பிற்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் சோலைமுத்து என்பவரை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.