தேங்கி நின்ற மழை நீரில் கசிந்த மின்சாரத்தால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்வம்-உமாராணி தம்பதியினர். இந்நிலையில் உமாராணி நேற்று இரவு அருகில் உள்ள கடைக்கு மளிகை வாங்குவதற்காக 2வது தெருவுக்கு சென்றுள்ளார். அந்த தெருவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை மழையால் மழை நீர் தேங்கி நின்றுள்ளது. இந்த மழை நீரில் துரதஷ்டவசமாக அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது குறித்து அறியாத உமாராணி தேங்கி நின்ற மழை நீரில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வியாசர்பாடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது “தங்கள் பகுதியில் மழை நேரத்தில் அடிக்கடி மின் கசிவு ஏற்படும். இதனை தடுக்க மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் கொளத்தூரை சேர்ந்த இளையராஜா வெல்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளையராஜா யுனைடெட் காலனி பகுதியில் வெல்டிங் வேலை பார்க்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த கொளத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.