தமிழ்நாட்டில் மின் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களும் இனிமேல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரிய பணிகளுக்காக இதற்கு முன்பே விண்ணப்பித்தவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக மின்வாரியத்தில் 56,000 பணியிடங்கள் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, 1,300 கணக்கீட்டாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள் என்று மொத்தமாக சுமார் 2,400 பதவிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 1000 ரூபாயும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 500 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 2021 ஆம் வருடத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து அடுத்த வருடம் மே மாதத்தில் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு, TNPSC மூலமாக தான் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
எனவே ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்தவர்கள் தேர்வு நடைபெறுமா? அல்லது அறிவிப்பை ரத்தாக்கி விட்டு மீண்டும் புதிதாக அறிவிப்பு வெளியிடுவார்களா? என்று குழப்பமடைந்திருக்கிறார்கள். இது தொடர்பில் மின்வாரிய அதிகாரிகள் வட்டம் தெரிவித்ததாவது, இனிமேல் மின்வாரியத்தில் டிஎன்பிஎஸ்சி மூலமாக தான் பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால் இதற்கு முன்பே விண்ணப்பித்தவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.