தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 94 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்கள் மூடப்பட்டதோடு, அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துணை ராணுவத்தினர் என்று அழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 94 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ரயில்கள் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம் நகரில் இருக்கும் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த துணை ராணுவத்தினர் போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனை, தேர்தல் பாதுகாப்பு மற்றும் பதட்டமான வாக்கு சாவடிகளில் பாதுகாப்பு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.