100-வது டெஸ்டில் விளையாடவுள்ள விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும் இந்திய முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.குறிப்பாக கடந்த 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இதுவரை 70 வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது விராட் கோலி 71-வது வீரராக இணைகின்றார். அதோடு இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 12-வது வீரர் ஆவார்.
அதோடு விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தை எட்டி 2 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இறுதியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த வங்காளதேச அணிக்கெதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அது மட்டுமில்லாது 100-வது டெஸ்டில் இதுவரை 9 வீரர்கள் சதம் அடித்திருந்தாலும் அதில் ஒருவர் கூட இந்திய வீரர்கள் கிடையாது. எனவே நாளை நடைபெறும் இந்த டெஸ்டில் விராட் கோலி 3 இலக்கத்தை எட்டினால் 100-வது டெஸ்டில் செஞ்சுரி போட்ட முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்துவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் .
மேலும் 100-வது டெஸ்டில் விளையாட உள்ள விராட் கோலிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ சார்பாக விராட் கோலிக்கு ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பது :
2007-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது விராட் கோலியை பற்றி கேள்விப்பட்டேன்.அப்போதில் இருந்தே விராட்கோலியின் திறமை பற்றி நிறைய பேர் பேச ஆரம்பித்துவிட்டனர். மேலும் அண்டர் 19 உலக கோப்பை தொடரில் ஒரு வீரர் சிறப்பாக விளையாடி வருவதாகவும், எதிர்காலஇந்திய அணிக்கு அவரே சிறப்பாக விளையாட போகிறார் என்றும் சக வீரர்கள் என்னிடம் கூறினர்.
தற்போது விராட் கோலி 100-வது டெஸ்ட் போட்டியில் விலையாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.தற்போது வளர்ந்து வரும் பல இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கள். உங்களை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளனர். அதுவே உங்களின் பெரிய சாதனை ” இவ்வாறு அவர் பாராட்டி பேசியுள்ளார்.