கொரோனோ வைரசால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15,000 உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்க, அதனுடைய தாக்கம் தமிழகத்தில் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பொதுமக்கள் கொரோனோ அச்சம் காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பலர் வீட்டில் இருந்து வேலை பார்க்கின்றனர்.
இதில் சம்பளம் பிடித்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கிற்கும் ரூபாய் 15,000 உதவி தொகை வழங்க வேண்டும் என்றும், கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்ட பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.