சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் போலியாக செயல்பட்ட நிறுவனத்தை அதிகாரிகள் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சஞ்சீவி நகரில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை திருச்சி மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது பாதுகாப்பற்ற குடிநீரை பழைய தண்ணீர் பாட்டில்களில் நிரப்பி உணவு பாதுகாப்பு துறையில் எந்தவித உரிமம் பெறாமல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிகாரிகள் தண்ணீர் நிரப்பி வைக்கப் பட்டிருந்த 2000 பாட்டில்களையும் சீல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 5000 பாட்டில்களையும் பறிமுதல் செய்து அந்த போலி நிறுவனத்தை நடத்தி வந்த பால்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட நியமன அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்களை வாங்கும் போது காலாவதி தேதி, தயாரிப்பு தேதி போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும் எனவும், அது குறித்த புகார்களை 9944959595 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.