குடி போதையில் வந்த அண்ணன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் மாநிலம் சண்டி மந்திரியில் உள்ள சுணபட்டி என்ற பகுதியில் வசிக்கும் அஜித் சிங் மற்றும் சத்னம் சிங் என்று இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் வங்கி பாதுகாப்பு ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக வேலையை இழந்தவர்கள் வங்கியில் கொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை தன் வசம் வைத்திருந்தனர். கடந்த சனிக்கிழமை சத்னம் தன் நண்பர்களோடு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து தம்பி அஜீத் சிங் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரக்கூடாது என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சத்னம் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தம்பியை சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாய் மற்றும் தந்தை ரத்தவெள்ளத்தில் கிடந்த மகனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குடிபோதையில் இருந்த சத்னம் சிங்கை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.