கஞ்சா பதுக்கிவைத்திருந்த தந்தை மற்றும் 2 மகன்கள் ஆகிய 3 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ள ஆதி சக்தி நகர் புலிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 45 வயதுடைய இவருக்கு கோகுல் (24), மனோஜ் (22) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தந்தை மற்றும் மகன்கள் இருவரும் தங்களது வீட்டிற்குப் பின்புறமுள்ள பாழடைந்த குடிசையில் 8 மூட்டைகள் அடங்கிய சுமார் 350 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து விற்று வந்ததாகத் தெரிகிறது.
இதனை அறிந்து பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் திருப்பத்தூர் போலீசார் உதவியுடன் ராஜேஷ் மற்றும் அவருடைய மகன்கள் 2 பேரையும் கைதுசெய்து வேலூர் சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றனர்.. 350 கிலோ கஞ்சா பதுக்கலில் தந்தை, மகன்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.