ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பணவெளி கிராமத்தில் அப்பாசாமி என்ற விவசாய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வேட்டாற்றிற்கு சென்றுள்ளார். தற்போது அனைத்து இடங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் குளித்துக்கொண்டிருந்த அப்பாசாமி திடீரென நீரால் இழுத்து செல்லப்பட்டார். இதனையடுத்து தன்னை காப்பாற்றுமாறு அப்பாசாமி சத்தம் போட, அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அப்பாசாமி தண்ணீரில் மூழ்கினார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி அப்பாசாமி தேடினர். அப்போது அப்பாசாமி, தண்ணீரில் மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 200 அடி தொலைவில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து அவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.