சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கத்தின் 80-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது, தமிழ் இசை சங்கத்தின் 80-ம் ஆண்டு விழாவில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தமிழிசை இன்று கொடிகட்டி பறக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த தமிழ் இசை சங்கம் தான். வரலாற்று புகழ் பெற்ற ராஜா அண்ணாமலை கட்டிடமானது கம்பீரத்தின் அடையாளமாகவும், கலைச்சின்னமாகவும், இசை சின்னமாகவும், தமிழ் மொழியின் அடையாளமாகவும், தமிழிசையை கோட்டை கட்டிக் காத்த அரங்கமாகவும் இருக்கிறது.
தமிழினத்தின் உரிமையை காக்க திராவிட இயக்கம் எழுந்த நிலையில், தமிழ் மொழியை காக்க மறைமலை அடிகள் தலைமையில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. தனித்தமிழ் இயக்கம் மற்றும் தமிழிசை இயக்கம் என அனைத்தையுமே திராவிட இயக்கம் முழுமையாக ஆதரித்து போற்றியது. தமிழகத்தில் தமிழ் பாடல்களை மேடையில் பாடினால் கேவலம் என்று ஒரு காலத்தில் இருந்தது. இதனால் மேடைகளில் தமிழ் பாடல்களை பாட வேண்டும் என திராவிட இயக்கம் கோரிக்கைகளை முன்மொழிந்தது என்று கூறினார். அதோடு தமிழ் மொழியின் பல சிறப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். மேலும் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று முதல்வர் கூறினார்.