வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் சதீஷ்குமார்-கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு திருமணம் நடக்கும்போது சதீஷ்குமாரின் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையை கலைவாணியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். அதன்பின் தற்போது மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். அத்துடன் சதிஷ்குமார் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 2 லட்சம் ரூபாயை கலைவாணியின் பெற்றோர் தர வேண்டும் இல்லையென்றால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி சதிஷ்குமார் கலைவாணியை அடித்து துன்புறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனால் கலைவாணி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார், அவரது தந்தை ராமசாமி, தாயார் பரமேஸ்வரி மற்றும் உறவினரான நிர்மலா ஆகியோரின் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் மற்றும் ராமசாமியை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான பரமேஸ்வரி மற்றும் நிர்மலா ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.