தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், விஷால் ரசிகர் மன்றம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் என்னை நடிக்க அணுகிய போது நான் மறுத்து விட்டேன். ஆன்லைன் சூதாட்டம் என்பது முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டிய ஒரு விளையாட்டு.
அதன் பிறகு நண்பன் உதயா அமைச்சராக பொறுப்பேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய 9 ஆண்டு கால கனவு தற்போது உதயா அமைச்சரானால் நிறைவேறியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் சிறப்பாக பணியாற்றுவார் என்று கூறினார். அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் இனி திரைப்படங்களின் நடிக்க கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் விஷால் ஜெயக்குமார் இனி மேடைகளில் திரைப்படப் பாடல்களை பாடாமல் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நடிகர் விஷாலின் பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.