ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த மரவட்டி வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்ற ரம்யா அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்கான சிகிச்சையை தொடர்ச்சியாக பதிவு செய்து அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 19.11.2019 அன்று பிரசவ தேதி அறிவிக்கப்பட்டு அவர் ராமநாதபுரம் உச்சிப்புளியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று கூறியதன் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள் கவனக் குறைவின் காரணமாக அவருடைய வயிற்றுப் பகுதியில் ஊசியின் உடைந்த பகுதியை வைத்து தைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சை முடிந்த பின்னர் ரம்யாவிற்கு தொடர்ச்சியாக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
பின் அவரை மீண்டும் பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய அடிவயிற்றுப் பகுதியில் உடைந்த விலா எலும்பு இருப்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதனை அகற்றுவதற்கு போதிய எலும்பு சார்ந்த மருத்துவர்கள் இல்லாததால் அவரை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிகிச்சை ஏதும் செய்யாமல் அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தாய் சேய் நல அலுவலர் பத்மா தலைமையில் 5 பேர் கொண்ட அலுவலர்கள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.