இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள் மீது அதிக அன்பும், பற்றும் வைத்திருந்தார். அதோடு குழந்தைகள் தான் நம் நாட்டின் வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய வலிமையின் அடித்தளம் என்றும் கூறினார். ஜவர்கலால் நேரு மீது குழந்தைகளும் அதிக அன்பு கொண்டிருந்ததால் அவரை அன்பாக நேரு மாமா என்று தான் அழைத்தார்கள். இதனால் தான் ஜவர்கலால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி ஜவர்கலால் நேரு பிறந்தார்.
கடந்த 1956-ம் ஆண்டு முதல் இந்தியாவில் குழந்தைகள் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1956-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20-ம் தேதி தான் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு ஜவர்கலால் நேரு மறைந்த பிறகு குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பும், அவர் மீது குழந்தைகள் கொண்டிருந்த அன்பு மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் போன்ற பல்வேறு விதமான சிறப்புகளை கருத்தில் கொண்டு நேரு பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 20-ம் தேதியில், உலகளாவிய தினமாக கொண்டாடும் நிலையில் அந்த தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குகின்றனர் என்றும், அவர்களை எந்த வழியில் நாம் உருவாக்குகின்றோமோ அதுவே நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் நேரு கூறுவார். மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் போன்றவற்றை மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்திலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத்தான் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தினத்தன்று ஒவ்வொரு பள்ளியிலும் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.