தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக அரசை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்து பேசியிருந்தார். இதனால் திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடதீர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இதில் தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் இருக்கும் பிரச்சனையில் தமிழிசை அவரது பாணியில் மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் தமிழிசை சிலந்திகளால் சிங்கத்தை என்ன செய்துவிட முடியும் என்று ஆக்ரோஷமாக கூறியிருந்தார். இந்த நிகழ்வுகளுக்கு தற்போது அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, சமுதாயத்தில் மூட்டை பூச்சி மற்றும் கரப்பானாக செயல்பட்டு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வருபவர்களை திமுக தான் பூச்சிக்கொல்லியாக செயல்பட்டு முடக்கி வருகிறது. சமூக நீதி மற்றும் சம தர்மம் போன்றவற்றை கொண்டு வந்தது உண்மை என்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து தான் உயர்வான பகுதிக்கு வந்துள்ளோம் என்பதை தமிழிசை ஒருபோதும் மறக்க கூடாது.
ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு தான் தமிழிசை பேசி வருகிறார். சனாதனம் மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவற்றின் வெற்றி என்பது சூத்திர பட்டம் கட்டப்பட்ட பொதுமக்களின் கழுத்தறுத்து நம்ப வைத்து செய்யப்பட்ட அநீதி தான். அவர் எங்கிருந்து எதற்காக பேசுகிறார் என்பது தெரியவில்லை. அவர் தானாக பேசுகிறாரா அல்லது யாரேனும் தூண்டுதலின் பேரில் பேசுகிறாரா என்பதும் தெரியவில்லை.
ஆனால் சமூக நீதி கோட்பாடு அரசியலைப் பற்றி பேசுகிறார் என்பதை அவர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவருக்கு பதவி மீது அதிக ஆசை வந்துவிட்டதோ என்னமோ. சிலர் பதவி மோகத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்டார்கள். மேலும் அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்துவிட்டு எதை எதையோ பேசி தூண்டி விடக் கூடாது என்று காட்டமாக கூறியுள்ளார்.