மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்ற தடை சட்டம் 2013 குறித்து நகராட்சி ஆணையர் அறச்செல்வி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அலுவலர்கள், தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் சில விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவையாவன, அனைத்து தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களும் முறையான பதிவை நகராட்சிகளில் மேற்கொள்ள வேண்டும். அதனை வருடந்தோறும் கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும், நகராட்சியிடம் அனுமதி பெறாமலும் நகரின் எந்த இடங்களிலும் கழிவறையாக இருந்தாலும் சரி சாக்கடையாக இருந்தாலும் சரி சுத்தம் செய்யக்கூடாது என்றும்,
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கழிவறைகளை சுத்தம் செய்ய அனுமதி அதற்குள்ளேயே பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஆறுகள் ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கொட்டக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் மனிதக் கழிவுகளை அகற்ற மனிதனை பயன்படுத்தக்கூடாது. இதனை மீறினால் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.