பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
டிஜிபி அலுவலகம் புகார் மனு அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. இது சமூக நீதிக்கான யாத்திரை அல்ல, மொழி இன உரிமைகளை யாத்திரை அல்ல, வறுமையை ஒழிப்பதற்கான யாத்திரை அல்ல, சுற்றுசூழலை பாதுகாப்பதற்கான யாத்திரை அல்ல, சமூக நல்லிணக்கத்துக்கான யாத்திரை அல்ல, மதவெறியை தூண்டுவதற்கான- சாதிவெறியை தூண்டுவதற்கான – வன்முறையை தூண்டுவதற்கான திட்டமிட்ட ஒரு செயல் திட்டம்.
வட இந்திய மாநிலங்களில் எப்படி ? வன்முறையை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தி… அங்கே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்களோ அதேபோல தமிழ்நாட்டிலும், அந்த அரசியல் உத்தியை கையாள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக கருதுகிறது. அதற்கு அனுமதிக்கக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் இதுவரையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக பாரதிய ஜனதா போராட்டங்கள் அனைத்தும் மதவெறியை தூண்டுகின்றன. குறிப்பாக நடிகர் விஜய், விஜய் சேதுபதி, சூர்யா, அவருடைய துணைவியார் ஜோதிகா இவர்களெல்லாம்…. இந்து மதத்தை புண்படுத்தி விட்டார்கள் என்று எப்போதோ ஓராண்டு – ஈராண்டு க்கு முன்பு ஏதோ ஒரு கலாச்சார நிகழ்வில் பேசிய பேச்சை துண்டித்து எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வன்முறையை உருவாக்கும் வகையில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
அதேபோல நெல்லை கண்ணன் அவர்கள், கவிஞர் வைரமுத்து அவர்கள் இப்படி பலரை இவர்கள் இந்துக்களை பயன்படுத்தி விட்டார்கள்… இந்துக்களை புண் படுத்தி விட்டார்கள்… என்று பிரச்சாரம் செய்து, சமூகத்தின் அவதூறு பரப்பி, அநாகரிகமாக.. அருவருப்பாக பதிவுகளை போட்டு சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தினார். அதேபோல இன்றைக்கு நான் பேசாததை பேசியதைப் போல சொல்ல்கிறார்கள்.செப்டம்பர் 27-ம் தேதி ஐரோப்பிய தமிழர்கள் நடத்திய பெரியார் கருத்தரங்கில் 40 நிமிடங்கள் நான் உரை ஆற்றினேன். அதில் பெரியாரைப் பற்றிப் பேசும்போது… பெரியார், புரட்சியாளர் அம்பேத்கரை பற்றி பேசும்போது மனுதர்மத்தை பேசாமல் நகர்ந்து போக முடியாது, கடந்து போக முடியாது.
ஆகவே நான் போகிற போக்கில் மனுதர்மத்தை ஏன் பெரியார் எதிர்த்தார்? என்று விளக்கும் போது, ஒரு கருத்தை சொன்னேன். அது மனு நூல் என்ன சொல்கிறதோ… மனுநூல் பெண்களை எப்படி மதிப்பிடுகிறதோ… அந்த கருத்தை நான் சொன்னேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல, என் வாழ்வில் என்றைக்கும் எந்த சூழலிலும் பெண்களை அவமதித்து பேசியது இல்லை.அரசியல் ஆதாயம் தேட கூடிய சாதியவாதிகள், மதவாதிகளும் தான்…
திரும்பத் திரும்ப என் மீது அபாண்டமான பழி சுமத்துகிறார்கள். அதுபோல இந்த முறையும் என் மீது அபாண்டமான பழி சுமத்துவது மட்டுமல்லாமல், மிக கேவலமாக தரம் தாழ்ந்து, அவதூறு பரப்புவதை மேற்கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து காவல்துறை வேடிக்கை பார்த்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் மீது பல தரப்பட்ட அமைப்புகளின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு புகாரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
உயர்நீதிமன்றத்தை மோசமாக வெளிப்படையாக பேசிய நபர் எச்.ராஜா. பெரியாரை கேவலமாக பேசிய நபர், அண்ணன் வைகோ அவர்களை மிக கேவலமாக பேசி, வீட்டை விட்டே வெளியே வரமுடியாது, நடமாட முடியாது என்றெல்லாம் எச்சரித்த நபர். எஸ்.வி சேகர் ஊடகத்துறை சார்ந்த பெண்களை மிகக் கேவலமாக பேசிய டுவிட்டரில் பதிவு செய்த ஒரு குற்றச்செயலை சுட்டிக்காட்டி புகார் கொடுக்கப்பட்டது.
இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அதே போல இப்போது புதிதாக களமிறங்கி பாஜகவில் இணைந்துள்ள நடிகைகள்… மிக கேவலமாக பேசி கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தமிழ்நாடு காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ஏன் என்று ? விளங்கவில்லை. ஆகவேதான் என்று தலைமை காவல் இயக்குனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம் என திருமாவளவன் தெரிவித்தார்.