கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், பல குடும்பங்கள் வேலைக்கு செல்ல வாய்ப்பு இல்லாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், முழு கல்வி கட்டணம் செலுத்த பெற்றோர்களை பள்ளிகள் நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, முழு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவை சில பள்ளிகள் மீறுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.