வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அழைக்கப்படவில்லை என்றும், இது குறித்து சட்ட மன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாகவும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருகிறது என்றும், மழை பெய்தாலும் அதை தேக்கி வைக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று கூறிய அவர், தண்ணீர் பஞ்சம் முழுமையாக தீர நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.