தி.மு.க பிரமுகரின் தற்கொலை வழக்கில் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் தி.மு.க பிரமுகரான வித்தியக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிஷா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வித்தியக்குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த வித்தியக்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் தனது இறப்பிற்கு நிஷாவும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என வீடியோ காட்சியை பதிவிட்ட பிறகு வித்தியக்குமார் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிஷாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.