பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட காரணத்தால் தி.மு.க நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் தி.மு.க கிளை தலைவராக பதவி வகித்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்த ஆரோக்கியராஜ், மனைவி மற்றும் குழந்தைகள் கேட்ட காரணத்திற்காக பரோட்டா வாங்குவதற்காக அருகில் உள்ள கரிகாலன் என்பவரது ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் பரோட்டா வாங்கி விட்டு, அங்கு கொடுத்த குருமா குறைந்த அளவு இருப்பதை பார்த்துள்ளார்.
இதனால் சாப்பிடுவதற்கு இது போதாது என்றும், இன்னும் கொஞ்சம் குருமா தருமாறு ஆரோக்கியராஜ் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் நீங்கள் கொடுத்த பணத்திற்கு இதுக்குமேல் குருமா தரமுடியாது என கூறியதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் கடை உரிமையாளர் கரிகாலன், அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த பரோட்டா மாஸ்டர் கருப்பசாமி, ஹோட்டல் உரிமையாளரின் நண்பர் முத்து போன்ற மூன்று பேரும் ஆரோக்கியராஜை பலமாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து விட்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சூலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால், நள்ளிரவு சம்பவ இடத்திற்கு தி.மு.க-வினர் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஹோட்டலின் உரிமையாளரான கரிகாலன், மாஸ்டர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மற்றொரு நபரான முத்து என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.