பொங்கல் விடுமுறையன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பொங்கல் விடுமுறை தினமான 16ஆம் தேதி அன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவ மாணவிகள் மத்தியில் கல்வியைக் காவி மயமாக்கவும் தமிழர்களின் தொன்மை விழாக்களைச் சீரழிக்க வழிவகுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பாஜகவின் பிரச்சாரத்திற்காக அரசுப் பணத்தைச் செலவழிப்பது உள்பட, எதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என்பது தெரியவருகிறது.
அரசுத் தேர்வுகள் குறித்துத்தான் பிரதமர் உரை நிகழ்த்துகிறார் என்றால் அதனை மாணவ, மாணவிகள் விரும்பினால் தங்களின் இல்லங்களில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். அதற்காக அவர்கள் பொங்கல் விழாவை விட்டு விட்டு, பள்ளிக்கு வர வேண்டியதில்லை.
எனவே நிர்வாக நடைமுறைகளுக்கு எதிரான பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் திமுக மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரதமர் @narendramodi அவர்களின் உரையைக் கேட்க 16-01-2020 அன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடுவதா?
உடனே திரும்பப்பெறாவிட்டால் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் எச்சரிக்கை.
விவரம்: https://t.co/GbJdssZrs1#dmk pic.twitter.com/AXyRQ5xLi6
— DMK (@arivalayam) December 28, 2019