திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ- வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அன்பு மடல் ஒன்றை முதல்வருக்கு எழுதியுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ? என்பதற்கான 6 காரணங்கள் இடம்பெற்றிருந்தது.
1. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஆளும் கட்சியின் உறுப்பினராக இருப்பதால் சட்டப்படி அவர் அமைச்சராவதற்கான அனைத்து தகுதியும் உள்ளது.
2. உதயநிதி ஸ்டாலின் முழுக்க முழுக்க அரசியல் சூழலில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சமூக நீதி பாதையும், அரசியல் சார் அறிவும், அரசியல் புரிதலும் அவருக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது என்பதை கழக உடன்பிறப்புகளும், தொண்டர்களும் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
3. சட்டமன்ற தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலின் நமது கட்சி மட்டும் இல்லாமல் தோழமை கட்சி வேட்பாளர்களுக்காகவும் கடுமையாக உழைத்தார். மேலும் தான் வெற்றி பெறாமல் போனாலும் பரவாயில்லை, தொண்டாமுத்தூர் தொகுதியில் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றும் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் வெற்றி பெற வேண்டும்” அவர் பேசியது கழக உடன்பிறப்புகள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது.
4. ஒரு செங்கல்லை எடுத்து காட்டி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் AIIMS மருத்துவமனை எங்கே? என்று கேட்கும் அளவிற்கு பாஜகவின் பொய்யான பிரச்சாரத்தை முறியடித்தவர்.
5. உதயநிதியை அமைச்சர் ஆக்குவது பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது. ஏனென்றால் கொள்ளை அடிப்பதையே முழு நேர வேலையாக வைத்து இருந்த SP வேலுமணி, அரசியல் நாகரிகம் அற்ற செயல்களில் ஈடுபடக் கூடிய ராஜேந்திர பாலாஜி ஆகியோரை கட்சியில் அமைச்சராக வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சர் ஆக்க வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி விமர்சிக்க அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
6. ஸ்டாலின் என்றல் உழைப்பு ” என்ற தலைவர் கலைஞர் அவர்களின் வாக்கிற்கு ஏற்ப முதல்வர் பதவியில் இருந்து தமிழக மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறீர்கள். எனவே இந்த நல்லாட்சி தொடர உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்” என்று அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார்.