இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, இன்றைக்கு எல்லோருமே ஆங்கிலம் வேண்டும் என்று சொல்கிறோம். யாருமே இந்தியை வேண்டுமென்று சொல்லவில்லை, விரும்பவில்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் எல்லாம் இன்றைக்கு ஹிந்தியிலே மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படக்கூடிய ஒரு சூழ்நிலை தானே உருவாகி இருக்கிறது.
ஒரு மொழி ஆதிக்கத்தை மறைமுகமாக இன்றைக்கு மத்திய, ஒன்றிய அரசு திணித்துக் கொண்டிருக்கிறதா ? இல்லையா ? இன்றைக்கு ஏன் நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட வேண்டிய அவசியம் வந்தது ? நம்முடைய தமிழுக்கு ஆபத்து என்பதாலே மட்டுமல்ல, இந்தியாவிலேயே இந்தி திணிப்பு எந்த உருவத்திலும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தான் நாம் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தோம்.
எனவே தான் இன்றைக்கு தமிழன் இன்றைக்கு வீரனாக எழுந்து வசனம் பேசக்கூடிய நிலையில் இருக்கிறான் என்று சொன்னால் நமக்குள்ளே இருக்கக்கூடிய தைரியம், நம்முடைய தலைவர் இருக்கிறார் நம்மை காப்பாற்றுவார் என்கின்ற நம்பிக்கை.
அன்றைக்கு ஆளுநரை எதிர்த்து கருப்பு கொடி காட்டிய இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். இன்றைக்கு நம்முடைய இளைஞர்களுக்கு முழு தைரியமும் இருக்கிறது, அவர்களுக்கு நம்பிக்கை வரக்கூடிய தலைவனாக நம்முடைய இளைஞரணியின் செயலாளரை நம்முடைய தளபதி தந்திருக்கிறார். எனவே எத்தனை காலமானாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து விட முடியாது, இது ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய பாஜகவிற்கு தெரியும் என தெரிவித்தார்.