தெரி கோயிலில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருக்கும் கராக்கின் பகுதியில் தெரி என்ற மிகவும் பழமை வாய்ந்த இந்து கோயில் ஒன்றுள்ளது. இந்த கோயிலானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சில மத அமைப்பினரால் தாக்கப்பட்டது. அதிலும் சுமார் ஆயிரம் பேர் சேர்ந்து கோயிலை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இந்த தாக்குதலுக்காக இந்து அமைப்பினர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
மேலும் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கோயிலை சேதப்படுத்திய 109 பேரிடம் இருந்து சுமார் 3,00,00,000 ரூபாய் வசூல் செய்து கோவிலை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. இதன்படி கோயில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை அக்கோயிலில் கொண்டாட இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்தனர்.
இதனை அடுத்து நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட அந்த பண்டிகையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான குல்சர் அகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் ‘கோயிலை சேதப்படுத்தியவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை’ என்று இந்து அமைப்பின் தலைவரான ரமேஷ் குமார் வன்க்வானி தெரிவித்துள்ளார். இவ்விழாவில் சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.