தர்மபுரியில் விடுமுறையை சிறப்பிக்க கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் விவசாய தொழிலாளி ஆவார். இவரது மகன் மோனிஷ் அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அரையாண்டு விடுமுறை என்பதால் நேற்றைய தினம் தனது மூன்று நண்பர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார் மோனிஷ்.
அந்த கிணற்றில் சுமார் 30 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. அப்போது குளித்து விளையாடி கொண்டிருக்கும் சமயத்தில் மோனிஷ் கிணற்றின் மேலிருந்து டைவ் அடித்தார். உள்ளே சென்ற அவர் வெகு நேரமாகியும் தண்ணீரின் மேலே வராத காரணத்தினால் சக நண்பர்கள் கூச்சலிட்டனர்.
அவர்கள் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவனை மீட்க முயற்சித்த போதும் மீட்பு பணி தோல்வியடைய மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மாணவனை கிராம மக்களின் உதவியோடு மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.