கோவில் சுவரில் தலையை மோத செய்து தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சொரத்தூர் பகுதியில் சிவகங்கை என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்ற சிவகங்கை பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு கோவிலிலேயே படுத்து தூங்கி விட்டார்.
அந்த சமயம் அப்பகுதியில் வசிக்கும் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளியான முருகன் என்பவர் அப்பகுதிக்கு வந்துள்ளார். இவர் மது போதையில் தூங்கி கொண்டிருந்த சிவகங்கையை எழுப்பி தகராறு செய்துள்ளார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த முருகன் சிவகங்கையை பிடித்து கீழே தள்ளியதுடன் சிவகங்கையின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிவகங்கை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவகங்கையின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் முருகன் தனக்கு ஒன்றும் தெரியாதது போல அப்பகுதியில் வந்து நிற்க, சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் குடிபோதையில் முருகன் தான் சிவகங்கை அடித்துக் கொலை செய்ததை ஒத்துக் கொண்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.