Categories
மாநில செய்திகள்

“என்னுடைய பேரன்”… உள்நோக்கம் இல்லை… அமைச்சர் சீனிவாசன் விளக்கம்..!!

நீலகிரியில் சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். முகாமை துவக்கி வைப்பதற்கு முன்பதாக விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று  கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான்.

இந்த சம்பவம் நடக்கும் போது நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டது. இந்த சம்பவம் குழந்தைகள் நல வாழ்வு மையம் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் யானைகள் முகாமை துவக்கி வைப்பதற்கு முன்பாக நான் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். அப்போது என் செருப்பு புல்வெளியில் மாற்றிக்கொண்டது. பின்னர் அங்கு இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

உடனே அவர்களில் ஒருவனை அழைத்து கழற்ற சொன்னேன். என்னுடைய பேரன் போல் நினைத்துதான் காலணியை கழற்ற சொன்னேன்; பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவர்களை அழைத்தேன். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. அப்படி ஏதும் தவறாக நினைத்து இருந்தால் அதை நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Categories

Tech |