நாமக்கல் மாவட்டத்தில் சிறிதும் ஈவு இரக்கமின்றி மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வீசாணம் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் வையாபுரி(60) என்பவர் மனைவி மற்றும் மகன் வெங்கடேஷ்(40) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் திருமணமாகியுள்ள நிலையில் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகின்றார். இதனால் வெங்கடேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து வையாபுரி 2 தினங்களுக்கு முன் வீட்டிற்கு பின்புறம் உள்ள கீற்று கொட்டையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து வையாபுரியை கொலை செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கு வையாபுரி மகன் வெங்கடேஷ் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் வெங்கடேஷை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மை சம்பவம் தெரியவந்துள்ளது.
அதில் வெங்கடேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள நிலையில் வையாபுரியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததால் வையாபுரி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சொந்த தந்தை என்று கூட பார்க்காமல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் கொலை செய்துவிட்டு யாரோ செய்தது போல் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.