கலைஞர் இறந்த பின்பும் அவரது தத்துவத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை விலங்குகளுடன் ஒப்பிட்டு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன்பின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் தற்பொழுது பேசி வருகிறார், அதில் மிருகமும், மனிதனும் இறந்த பின்பும் வாழக் கூடிய திறன் கொண்டவைகள் ஆனால் ஒரு சிறு வித்தியாசம் மட்டுமே உண்டு. உதாரணத்திற்கு யானை இறந்த பின்பு அதன் தந்தம் பிறருக்கு உதவுகிறது. புலி இறந்த பின்பு அதனுடைய பல்லும் நகங்களும் பிறருக்கு உதவுகிறது. மான் இறந்த பிறகு அதனுடைய தோல் பிறருக்கு பயன்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு விலங்குகளும் இறந்த பின்பு ஏதேனும் ஒரு வகையில் பிறருக்கு பயன்படுகிறது. ஆனால் மனிதர்களில் எவர் ஒருவர் இறந்த பின்பும் அவருடைய தத்துவங்களும், அவருடைய செயல்பாடுகளும் தொடர்ந்து மக்களுக்கு உதவுகிறதோ அவர்கள் இறந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த வகையில் டாக்டர் கலைஞர் கருணாநிதி இறந்த பின்பும் அவரது தத்துவங்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கவிஞர் வைரமுத்து கலைஞருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.