நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழை வளர்க்க வேண்டும் என்று கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதில் குறள் எழுப்பி வருகிறது. அதன்படி நாமக்கலில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ் மொழியை வளர்க்க கோரி குரல் எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் பாஜகவிற்கு எதிராக போய் பிரச்சாரம் செய்யக்கூடாது, திமுக அரசு மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஜி.கே. செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் பாஜகவை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்கள் கைகளில் பாதாகைகளை ஏந்தி கொண்டு கோஷங்களை எழுப்பினர். அதில் “பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க வேண்டும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் தமிழை கட்டாயமாக்க வேண்டும், தமிழகத்தில் தமிழை வளர்க்க வேண்டும், ஆட்சி மொழியாக தமிழை வைக்க வேண்டும், மொழி அரசியல் செய்யக்கூடாது” உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.
தமிழக அரசை கண்டித்தும், திமுகவினரை கண்டித்தும் தொடர்ந்து கோஷங்களை எழுப்பப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தொண்டர்கள் வைத்திருந்த பாதகை சர்ச்சையை எழுப்பி உள்ளது. அதில் “கட்டாயமாக…. கட்டாயமாக்கு… பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கு என்ற வரிகள் இடம்பெற்று இருந்தது. இதில் ‘கட்டாயமாக்கு’ என்ற வார்த்தையில் “கட்டாயாமாக்கு” என எழுத்து பிழையாக இருந்தது. அதைக்கூட கவனிக்காமல் ஆர்பாட்டத்திற்கு எடுத்து வந்துள்ளனர். அதுவும் தமிழை வளர்க்கக்கூடிய நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிழையுடன் இடம்பிடித்த தமிழ் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதற்குள் மீம்ஸ் தெறிக்க ஆரம்பிக்கவிட்டது. முதலில் நீங்கள் தமிழை ஒழுங்கா படிக்கவும், அதன் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.