தர்மபுரியில் தக்காளியை பறிக்க ஆளில்லாமல் அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தர்மபுரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அது நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ள சமயத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்குதடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்த போதிலும், தக்காளியை பறிக்க கிராம மக்கள் யாரும் முன் வருவதில்லை என்பதால், தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவுகளை காரணம் காட்டி கிராம மக்கள் யாரும் தக்காளியைப் பறிக்க முன்வருவதில்லை. அதிக கூலி கொடுத்து ஆட்கள் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் முன்பெல்லாம் 30 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டிக்கு ரூபாய் 800 கிடைக்கும் ஆனால் தற்போது ரூ 150இல் இருந்து 200 வரை மட்டுமே கிடைப்பதாகவும் ,
விலை வீழிச்சியால் நஷ்டம் ஏற்படுவதால் தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டோம். இதனால் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்ட தக்காளி வீணாவது மனவேதனை அளிப்பதாக தெரிவித்த அவர்கள் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.