இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 24-ம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வட இந்தியாவில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். இந்நிலையில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் தந்தேரஸ் திரு விழா கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது வீடுகளில் அனைவரும் விளக்கேற்றி வீட்டில் உள்ள செல்வத்தை பூஜையில் வைத்து வழிபடுவார்கள். இந்த திருநாளில் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
1. செய்ய வேண்டியவை:
இந்த திருநாளின் போது வீட்டிற்கு புதிதாக துடைப்பம் வாங்கலாம். ஏனெனில் வீட்டை சுத்தப்படுத்துவதற்கு துடைப்பம் பயன்படுத்தப்படுவதால் அதில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்ற ஒரு ஐதீகம் இருக்கிறது. அதன் பிறகு இந்த திருநாளில் மகாலட்சுமி நம் வீட்டிற்கு வருவார் என்ற ஐதீகமும் இருப்பதால் நாம் பண்டிகைக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே வீட்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அதோடு கோ பூஜை செய்வது மற்றும் பசு மாடுகளுக்கு உணவு கொடுத்தால் நன்மைகள் பெருகும். இந்த திருநாளில் ஆயுர்வேதத்தின் கடவுள் ஆன தன்வந்திரியை வணங்குவதால் உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கி உதவலாம். இதனால் நம்முடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தொடர்ந்து லட்சுமி தேவி மற்றும் குபேரரையும் நாம் பூஜை செய்து அவர்களுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வணங்கினால் மிகவும் சிறப்பு.
2. செய்யக்கூடாதவை:
இந்த நன்னாளில் நாம் கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை வாங்கக்கூடாது. பாரம்பரியமான பொருட்களை மட்டும் தான் வாங்க வேண்டும். ஏனெனில் பாரம்பரியமான பொருட்கள் மட்டும் தான் வளம் சேர்க்கும் என்பதால் கூர்மையான பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
அதன்பிறகு அந்நாளில் அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருப்பதோடு, வெங்காயம் மற்றும் பூண்டு, முட்டை போன்ற உணர்ச்சிகளை தூண்டக்கூடிய பொருட்களையும் சாப்பிடக்கூடாது. போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது. இந்த நாளில் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. அப்படி செய்வது தீமையாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்நாளில் வீடு முழுவதும் தீபமேற்றி வைப்பதுடன் வீட்டில் உள்ள ஒரு பகுதியை கூட இருளடைய செய்யக்கூடாது.