குடிநீர் இன்றி சிரமப்படும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எப். கீழையூர் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடும் சிரமத்தில் உள்ள மக்கள் தண்ணீரை தேடி அலைவது மட்டுமில்லாமல் ஒரு குடம் தண்ணீரை ஐந்து ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமையில் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததால், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.